முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்

தமிழக பாஜகவில் டெல்லி அனுமதியில்லாமல் யாரையாவது நியமிக்க முடியுமா என மாநில தலைவர் அண்ணாமலைக்கு நடிகையும், அக் கட்சியில் இருந்து அண்மையில் விலகியவருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபகாலமாக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளில் அதுவும் குறிப்பாக அதிமுகவில் பல நிர்வாகிகள் வரிசையாக இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐடி விங் நிர்மல் குமார் மற்றும் பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்து உள்ளார். பா.ஜ.க.வில் இத்தகைய சூழ்நிலை வருவதற்கு முக்கிய காரணமே பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் தான் என விலகியவர்கள் பலர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அவர் ”பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளர முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை இங்கு மாறியுள்ளது. ஒரு காலத்தில் திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்றும், திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தான் நாங்கள் கட்சி நடத்தியதாகவும் கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள் பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன.

மேலும் தற்போது விலகியவர்கள் எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் வரிசையில் இருந்தவர்கள் தான். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு, கட்சியிலும் சேர்த்து கொண்டுள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம்? அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர்? ஆனால் இப்போது எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்போது தான் புதிய தலைவர்களுக்கு பதவியும் அளிக்க முடியும்” என பொறுமையாக பேசி வந்த அண்ணாமலை திடீரென ஆக்ரோஷமாக பேச துவங்கினார்.

“நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை நான் அரசியல் செய்ய வந்திருக்கிறேன்…. பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர், ஜெயலலிதா போல முடிவு எடுப்பேன். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன் தான், அண்ணன் விஜயகாந்தை செய்தது போல என்னை செய்ய முடியாது. அவரின் கேரக்டரை காலி செய்து பேசியது போல என்னுடைய கேரக்டரை பற்றி பேச முடியாது. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன்.

பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை பிடிக்கும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்க தான் செய்யும். என்னை டெல்லி மாற்றி விடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் இப்போது செய்து கொண்டு இருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.இந்த பேட்டியின் போது சில ஆக்ரோஷமான வார்த்தைகளையும் அண்ணாமலை பயன்படுத்தி இருந்ததால், இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதோடு, கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்து கடுமையான விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “அண்ணாமலை நீங்கள் யாரையும் manager- ஆகவோ அல்லது தலைவராகவோ ஆக்கத் தேவையில்லை. அனைவரும் சுயமாக உருவாக்கப்பட்டவர்கள். முதலில் சென்று களப்பணி செய்யுங்கள்… தமிழகத்தின் அடிமட்டத்தை அடையுங்கள். டெல்லி அனுமதியோ ஆர்எஸ்எஸ் அனுமதியோ இல்லாமல்
கழுதையை கூட நியமிக்க முடியாது. டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேச முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டெல்லி உங்களைப் பார்த்து பயப்படுவது போல் பேசுவது, தமிழ் செய்தி சேனல்களில் டெல்லியை பார்த்து பயப்படாமல் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் நீங்கள் அதே விஷயம் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்” 20-30 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றியவர்களை சேறு என்று கருத்து சொல்வது முட்டாள்தனமான விஷயம். மோடி ஜி மற்றும் அமித்ஷா ஜி மற்றும் பி.எல்.சந்தோஷ் ஜி 30 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். அவர்களை சேறு என அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தமிழ்நாடு, தேசம் மற்றும் பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் – சக்கர நாற்காலியில் வரைந்து இளைஞர் கின்னஸ் சாதனை

Web Editor

ஜகமே தந்திரம்: பாடல் ஆல்பம் வெளியீடு!

G SaravanaKumar

பகத்சிங் நாடகம்: தூக்குப் போடும் காட்சியில் நடித்தபோது சிறுவன் உயிரிழப்பு

Gayathri Venkatesan