ஒற்றை தலைமை விவகாரம் ; சின்னத்தை இழந்ததால் அதிமுக வேட்பாளர்கள் விரக்தி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால்  சின்னம் கிடைக்காது என்பதால் அதிமுக வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இப்பிரச்சனை எப்போது தீரும் என்ற கவலை அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகளை தொற்றிக் கொண்டுள்ளது.…

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால்  சின்னம் கிடைக்காது என்பதால் அதிமுக வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இப்பிரச்சனை எப்போது தீரும் என்ற கவலை அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகளை தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள  இரண்டு மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட  510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதவிகளில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம்  இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது.

வேட்புமனுவில் உள்ள  form A form B ஆகியவற்றில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களுக்கு  இரட்டைஇலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் , மாநகராட்சி நகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் போட்டியிடாமல் அதிமுக நிர்வாகிகள் ஒதுங்கியுள்ளனர்.

குறிப்பாக, மாநகராட்சியான காஞ்சிபுரம் வார்டு 36 மற்றும் தஞ்சாவூர் வார்டு 8லும், நகராட்சி கவுன்சிலர் பதவிகளான தேனி பெரியகுளத்தில் உள்ள வார்டு  26 மற்றும் மயிலாடுதுறை வார்டு 19லும் அதிமுக சார்பில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இங்கு அவர்கள் சுயேட்சையாகவும் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் புதுக்கோட்டை வார்டு 7 மற்றும் கடலூர் வார்டு 26லும் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவில்லை.  மீதமுள்ள ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், மற்ற இதர ஊராட்சி பதவியிடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு சுயேட்டை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

அதிமுகவில் எரிமலையாய் வெடித்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் எப்போது முடிவிற்கு வரும் என தெரியாதநிலையில், இதேநிலை நீடித்தால் அதிமுக என்ற கட்சி காணாமல் போய்விடுமோ ? என்ற அச்சம் தொண்டர்கள் மனதில் நிலவுகிறது.

விக்னேஷ்வரன். இரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.