“தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் ஒப்பந்தம் ரத்து” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளை பொத-தனியார் கூட்டாண்மை (றிறிறி) முறையில் ஒப்படைக்க ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் விட்டதை, தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

சமூகத்தின் அடித்தளத்தில் பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மக்களே பெரும்பான்மையாக, தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் நிலையில், அவர்களது நிரந்தரப் பணியையும், ஊதியத்தையும் பறிப்பதற்காகவே இந்த பி.பி.பி. முறை செயல்படுத்தப்படுகிறது.
எனவே, இதனை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த நியாயமான கோரிக்கைக் குரலுக்கு மதிப்பளித்து, டெண்டரை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது; நன்றி தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்தம், தினக்கூலி, தொகுப்பூதியம் மற்றும் பிற தற்காலிக முறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இன்னும் நிரந்தரமற்ற நிலையிலேயே உள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் பணியிட நலன்களை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு இலாப நோக்கத்திற்காக அல்ல; மக்களுக்கு தரமான பொது சேவைகளை வழங்குவதற்காகும். எனவே, பொதுச் சேவைகளில் தனியார்மயக் கொள்கைகளுக்கு இடமளிக்காமல், நிரந்தர பணியாளர்களின் மூலம் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.