அனைத்து பள்ளிகளிலும் 1-8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் ஜனவரி 10ம் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கு நீட்டிப்பு நீட்டிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி என்றும் வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும் என்றும், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என்றும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களை பொறுத்த அளவில், அனைத்து பள்ளிகளிலும் 1-8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் காட்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
- உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
- மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
- உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
- அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஒமிக்ரான் தொற்று நிலவரத்தைப் பொறுத்த அளவில், மாநிலம் முழுவதும் ஏற்கெனவே 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியிருந்த நிலையில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவையில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








