4 வழிச்சாலை: நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு-சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநில செயலாளர்…

விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், “விழுப்புரம் – நாகப்பட்டினம் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த 2014ம் ஆண்டு முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு எல்லை கற்களையும் நட்டுள்ளனர்.

இதற்கு நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக உதாரணமாக சதுர அடி ரூ. 350/- எனவும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட மனைகளுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை இருமடங்கு எனக் கூறி ரூ. 150/-மும், நிலங்களுக்கு ஒரு சென்ட் ரூ. 5,000/ என மிக குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீடுகள் உள்ள பல மனைகள், புஞ்சை, நஞ்சை நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு அனைத்தும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இழப்பீட்டுத் தொகை அதிகமாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி, நிலம் கொடுத்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக இம்மாவட்டங்களில் இழப்பீட்டு தொகை 5 முதல் 10 மடங்கு உயர்த்தி வழங்கிட சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை அடியாட்களை வைத்து உடனடியாக இடத்தை காலி செய்து தருமாறு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தை பறிகொடுத்த பொதுமக்கள் பரிதவித்து, கூடுதலாக இழப்பீடு கோரியும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அராஜக நடவடிக்கையை கண்டித்தும், இதர கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்  இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சாலை விரிவாக்கப் பணிக்காக தங்களின் நிலங்கள், வீடுகளை இழந்துள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கையினை நிறைவேற்றித் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக இழப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்துள்ள மக்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கிட வேண்டும்.

முழுமையான இழப்பீட்டுத் தொகை கொடுத்த பின்னரே பணிகளை ஆரம்பிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

சாலை விரிவாக்கம் நடக்கும் இந்த வழியில் பல்லாண்டு காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் பட்டா இல்லாத குடும்பங்களின் வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்திடவும், கட்டிடங்கள் இடிக்கப்படும் போது பாதி கட்டிடம் இடிக்கப்பட்டாலும் அக்கட்டிடத்திற்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும் வழங்கிட வேண்டும்.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் குளுப்பை ராமசாமி செட்டியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் 44 குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டம், கொத்தட்டை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு அமைக்கப்படவுள்ள சுங்கச்சாவடியை பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு வேறு இடத்திற்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அறிவிப்பு ஆணை கொடுக்காமலும் (3E), 60 நாட்களுக்கு முன்பு குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமலும் அப்புறப்படுத்துவது சட்டவிரோதமானதாகும். முறையான வழிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.