பா.ரஞ்சித்தின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்-திருமாவளவன்

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக்…

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் , நடிகர் ஜான் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்புரையாற்றிய இளங்கோவன், “இது எதிர் கலாச்சாரம் இல்லை. நிஜ கலாச்சாரம். இது நம் தமிழனின் கலை. பொய்யாக நுழைந்த பண்பாட்டை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பா.ரஞ்சித்துக்கு எனது பாராட்டுகள்”. என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய எம்.பி கனிமொழி, “பொதுவாக மார்கழி மாதத்தில் மியூசிக் அகாடமியில் யாராவது ஒருவர் அமைதியாக பாடி கொண்டிருப்பார். ஆனால், இப்போது இங்கு மேடையே அதிருது. அதுதான் நம்முடைய கலை.

நம்முடைய போராட்டங்களை, கண்ணீரை, இரத்தத்தை, வியர்வை துளிகளை சொல்லக்கூடிய கலைகள் இது. பா.ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் இதே வீச்சோடு இந்த மக்களிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும்”. என்றும் கூறினார்.

சிறப்புரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், “மக்களிசை நிகழ்ச்சியை இயக்கமாக மாற்றுவது கடினம் அதை செய்திருக்கிறார் பா.ரஞ்சித். அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். ரஞ்சித், இயக்குநர் மட்டுமல்ல சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார்.” என்று கூறினார்.

வெற்றிமாறனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “திரைத்துறை உள்ளிட்ட பண்பாட்டு தளத்தில் சாதியாவாதிகள் ஆக்கிரமித்து இருந்தார்கள். ஆனால் இன்று தனது துணிவால் ரஞ்சித் திரைத்துறையில் காய்களை நகர்த்தி வருகிறார்.

எவராலும் கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து எங்கோ ஒரு மூலையில் இருக்கிற கலைஞர்களை அடையாளப்படுத்தி, நாங்கள் உயர்ந்தவர்கள் என கூறி கொள்பவர்கள் பாடுகிற இந்த மேடையில் மக்களிசை கலைஞர்களை அழைத்து வந்து மரியாதை செய்வதை நினைத்து பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்”. என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மனிதன் உருவாக்கிய முதல் இசை கருவி பறைதான். அதுதான் தவில், கோயில் மேளம் உள்ளிட்ட வடிங்களை பெற்றது. போர் குணத்துடன் இந்த களத்தில் இருப்பவர் ரஞ்சித்.

பெரிய பெரிய பண முதலைகள் உள்ள துறை திரைத்துறை, அவர்களுக்கு ஏற்ற வகையில் படம் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. அதை உடைத்தவர் ரஞ்சித். இது (Counter) கலாச்சாரம் இல்லை என்கவுண்டர் (Encounter) கலாச்சாரம்.

ரஞ்சித்தின் இந்த முயற்சியை நெஞ்சார்ந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். வட நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த திரை துறையில் அண்ணா, எம்.ஆர்.ராதா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற திராவிட கலைஞர்கள் திரைதுறையை பண்பாட்டு தளங்களை மிக நேர்த்தியாக கையாண்டார்கள். அது அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்று தந்தது.” என்று தனது உரையில் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.