#Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!

தமிழ்நாடு சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகையாளரை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில்,…

Can you go to #Tamilnadu and ask questions to political leaders in Hindi? - Karke scolded the journalist!

தமிழ்நாடு சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகையாளரை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது மூடா முறைகேடு வழக்கு சித்தராமையா ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்த விவகாரத்தை மையப்படுத்தி சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இந்த சூழலை சாதகமாக்கிக்கொண்ட பாஜக, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது மூடா விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவித்தார்.  இதற்கு அந்த பத்திரிகையாளர் இந்தியில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை கேட்டதும் கோபடமடைந்த மல்லிகார்ஜுன கார்கே, கேள்வியை கன்னடத்தில் கேட்குமாறு காட்டமாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அவர்..

“கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொண்டு கன்னடத்தில் கேள்வி கேளுங்கள்” என தெரிவித்தார்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.