ஆன்லைனில் அழகு குறிப்பு சொல்லலாம்… பக்கவாதத்திற்கெல்லாம் X தள பக்கத்திலேயே ஆலோசனையா?

ஆன்லைனில் அழகு குறிப்பு சொல்லலாம் ஆனால் பக்கவாதத்திற்கெல்லாம் X தள பக்கத்திலேயே ஆலோசனை வழங்க தொடங்கிவிட்டனர்.  மக்கள் உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம் இது… ஒருவர் மனதில் எந்த சந்தேக எழுந்தாலும் அதற்கான பதில்…

ஆன்லைனில் அழகு குறிப்பு சொல்லலாம் ஆனால் பக்கவாதத்திற்கெல்லாம் X தள பக்கத்திலேயே ஆலோசனை வழங்க தொடங்கிவிட்டனர்.  மக்கள் உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம் இது…

ஒருவர் மனதில் எந்த சந்தேக எழுந்தாலும் அதற்கான பதில் இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.  எந்த துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கு இணையத்தில் ஒருவர் விளக்கம் கொடுத்திருப்பார்.  இதற்கு மருத்துவ துறையும் விதிவிலக்கல்ல.  யூ டியூப், பேஸ்புக்,  இன்ஸ்டா கிராம்,  வாட்ஸ் ஆப்  என அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் மருத்துவக் குறிப்புகள் சொல்வோரின் எண்ணிக்கை கணக்கிடமுடியாதது.

இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால்,  ஒரு கேள்விக்கு சரியான பதில் ஒன்றிரண்டு கிடைக்கிறது என்றால்,  தவறான போலியான பதில்களோ கணக்கில்லாமல் இணையத்தில் கிடைக்கிறது.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

இந்நிலையில் ஜிரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் அண்மையில் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.  அது பலரையும் அதிரச்சியடைய வைத்தது.  அந்த பதிவில்,  சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு தனது முகத்தில் தொய்வை கவனித்ததாகவும்,  அதோடு, வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரமப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  இதனை அடுத்து உடனடியாக மருத்துவரை அணுகியபோதுதான்,  தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்ததாக கூறியிருந்தார்.  தான் முழுமையாக குணமடைய 3-6 மாதங்கள் ஆகும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். 

நிதின் காமத்தின் இந்த பதிவிற்கு பலரும் ஆறுதல் கூறி,  விரைவில் குணமாக வேண்டும் என பதிவிட்டனர் . பல கருத்துக்களுக்கு மத்தியில், ஷங்கர் ஷர்மா என்பவரின் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  அவர் தனது பதிவில் ஹைபர்பெரிக் ஆக்ஸிஜன் தெரப்பியை உடனடியாக மேற்கொள்ளுமாறும்,  அடுத்ததாக அமேசானில் கிடைக்கும் அகச்சிவப்பு சிகிச்சை சாதனத்தை வாங்கி பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார். அதோடு சில மாத்திரைகளையும் பரிந்துரை செய்திருந்தார்.  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போகிறபோக்கில் சமூக வலைதளத்தில் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  எந்த ஒரு நபருக்கு சிகிச்சை தேவைப்பாட்டாலும் அந்த தனி நபரின் உடல்நிலை,  மருந்து ஏற்பு நிலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதிலும் பக்கவாதம் போன்ற தீவிர பிரச்னைகளுக்கெல்லாம் மிகவும் கவனமாக ஆராய்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  இப்படி இருக்க ஷங்கர் ஷர்மாவின் X தள மருத்துவ ஆலோசனைக்கு மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை இயக்குநர் பிரமேஷ் சிஎஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார். இது போன்ற நபர்களை நம்புவது பெரிய ஆபத்தில் தள்ளும் எனவும் விமர்சித்துள்ளார். மேலும் அறிவியல் ஆதாரம் இல்லாது பரிந்துரைக்கப்படும் இத்தகைய மருத்துவ முறைகளை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரமேஷ் சிஎஸ்-ன் இந்த கருத்துக்கு ஆதரவாக தற்போது பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.  இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

முடி கொட்டுவது,  முகத்தை பொழிவாக வைத்துக்கொள்வது என சின்ன சின்ன விசயங்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் கருத்து கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பக்க வாதத்திற்கெல்லாம் சர்வசாதாரணமாக மருந்துகள் பரிந்துரைப்பதை மிகுந்த கவனத்துடன் பொதுமக்கள் அணுக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.