கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம்,இச்சிப்பட்டி, வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் 30 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன . கோடங்கிபாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் எழில் ப்ளு மெட்டல்ஸ் கல்குவாரி, கிரஷர் மற்றும் எம்.சாண்ட் தொழிற்சாலைக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரியும்,முறைகேடாக அனுமதி வழங்கியது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக் கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயி விஜயகுமார் என்பவர் பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் விவசாயி விஜயகுமார் தனது நிலத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி இன்று மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த நிலையில் விஜயகுமாருக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் விஜயகுமாரை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாகவும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விஜயகுமார் உடன் இணைந்து நானும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்கள் கூறுகையில், 15 வருடங்களாக அரசு விதிகளை மீறி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் இயங்கி வரும் இந்த கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயி விஜயகுமார் தொடர்ச்சியாக மனு அளித்தும். அரசின் அளவை மீறி கனிம வளத்தை சுரண்டும் இந்த கல்குவாரியால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய மாசு ஏற்படுத்தியுள்ளதாகவும்,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இந்த கல்குவாரி குறித்து சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள இரண்டு உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகுமாரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற விட்டால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் திங்கட்கிழமை அன்று அனைத்து விவசாய சங்கங்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகளோடு விதிகளை மீறி இயங்கி வரும் எழில் ப்ளூ மெட்டல்ஸ் என்ற கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரியில் இரண்டு பேர் இறந்த பின்பு தான் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தற்போது செயல்படுவதால் இங்கும் அது போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் தான் எங்களுக்கு நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி திங்கட்கிழமை கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







