சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுக பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் செங்கோட்டையன், உள்ளிட்ட பல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் குறித்து இந்த பொதுக்குழுவில் சர்ச்சை வெடித்தது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வைத்திலிங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் இன்று தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். அப்போது தஞ்சாவூர் செல்லும் வழியில் பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதியான திருமாந்துறை சுங்கச் சாவடி பகுதியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அவருக்கு மேளதாளத்துடன், மாலை அணிவித்து மலர் கொத்து கொடுத்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சி.வி.சண்முகம் ஓபிஎஸ் அணியில் உள்ள நபர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக வெளியிட்ட தகவல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது, ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, சட்டப்படி பொதுக்குழு நடத்த முடியாது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது திரளான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.