This News is Fact Checked by Newschecker
ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரிக்கும் போது, பாஜகவினர் சிலரின் வேட்டிகளில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதாக பகிரப்பட்டுவரும் வீடியோ பொய்யானது, பழையது மற்றும் தேர்தலுக்கும் வீடியோவிற்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்கும் போது பாஜக தொண்டர்களின் வேட்டிகளில் தீ பற்றி எரிந்ததாக கடந்த மே 9-ம் தேதி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த பதிவில், “ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்த 5 பாஜகவினரின் வேட்டிகளில் தீ பற்றிக்கொண்டது. இப்போது ராகுலின் உருவபொம்மைகள் கூட பாடம் புகட்ட ஆரம்பித்துள்ளனர்” இவ்வாறு பகிரப்பட்டிருந்தது.
இந்த வீடியோவின் மற்றொரு பாகத்தை பகிர்ந்த வேறொரு நபர், “ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர் மீது வினைப்பயன் செயல்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு
தோராயமாக பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆய்வு செய்த Newschecker, போராட்டக்காரர்களின் கையில் இருக்கும் கொடிகள் பாஜக கொடியாக தெரியவில்லை என்பதை முதலில் கண்டறிந்தனர். இது முதலில் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர், வீடியோவின் கீஃப்ரேம்கள் தலைகீழாக ஆராயப்பட்டது. அப்போது, இந்த வீடியோ makeagif.com என்ற இணையதளத்தில் பகிரப்பட்ட வைரலான வீடியோ என தெரியவந்தது. மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது எனவும் தெரியவந்தது.
வீடியோவை ஆராயும் போது, கேரளாவில் உள்ள பத்தனம்திட்டாவில் கேரள மாணவர் சங்கம் (KSU) அணிவகுப்பின் போது இந்த நிகழ்வு நடந்ததாக கண்டறியப்பட்டது. இந்த விபத்தின் போது மகாத்மா காந்தி (MG) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராக காங்கிரஸின் மாணவர் பிரிவான KSU அமைப்பினர் போராட்டம் நடத்தியதாக ஜூலை 5, 2012 தேதி ஏசியாநெட் நியூஸ் சேனலில் செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல், ஜூலை 24, 2012 தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தாலும் இந்த நிகழ்வு பகிரப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கேரள உயர்நீதிமன்றத்தில் மாநிலம் முழுவதும் உருவ பொம்மைகளை எரிப்பதைத் தடை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் அந்த மனுவில் ஜூலை 4 அன்று பத்தனம்திட்டாவில் நடந்த இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
அதாவது, “பத்தனம்திட்டாவில் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக எம்ஜி பல்கலைக்கழக துணைவேந்தர் ஊழல் செய்ததாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவரது, உருவபொம்மையை எரிக்கும் முயற்சியில் மாணவர்கள் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது துணைவேந்தரின் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, அவர்களில் சிலரின் வேட்டிகளில் தீ பற்றி எரிந்து அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவர்களில், கேரள மாணவ அமைப்பின் மாநில, மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்குவர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
எனவே, இந்த வைரல் வீடியோ 8 ஆண்டுகள் பழமையானது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுடன் இந்த வீடியோ தொடர்புடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note: This story was originally published by ‘Newschecker‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….







