விவசாயிகளை பாதிக்கும் நிலக்கரி சுரங்க பணியை மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான  ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டங்களும் செயல்படுத்த கூடாது என்பது விதி.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு, வடசேரி, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆயத்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்டினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும், இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே விவசாயிகளின் வருங்கால நலன், மற்றும் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆயத்தப் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்”  என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.