முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

பட்ஜெட் வரலாறு: இந்திய வரலாற்றில் மறக்க முடியாத 12 பட்ஜெட்டுக்கள்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

இந்தியாவைப் பொருத்தவரை மத்திய பட்ஜெட்டுகளின் வரலாறு சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரத்திற்கு பின்பு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நாட்டின் முதல் பட்ஜெட் 1869ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி அப்போது இந்திய வைஸ்ராயின் நிதி ஆலோசனைக் குழு தலைவராக இருந்த James Wilson என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்,   பிரதமராக இருந்தவர்கள் உள்பட இதுவரை 28 பேர் நிதி அமைச்சர்களாக பொறுப்பு வகித்து பட்ஜெட்டுக்களை கையாண்டுள்ளனர். இதில் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் பிற அம்சங்களில் மறக்கமுடியாத 12 பட்ஜெட்டுகள் குறித்து பார்ப்போம். 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியையே சேரும். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டி  கோயமுத்தூரில் பிறந்தவர்.  சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். 1947ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஆர்.கே.ஷண்முகம் செட்டி தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பதவிக்கு தேவையான நேர்மையுடனும், மனசாட்சியுடனும் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்று கூறி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அவர், நாம் செய்யும் காரியங்களுக்கு நாம்தான் இனி மக்களுக்கு பதில் சொல்லக் கடைமைப்பட்டுள்ளோம்  என்று தனது நிறைவுரையில் குறிப்பிட்டார். புதிய வரி விதிப்புகள் இல்லாமல் அமைந்த அந்த பட்ஜெட் சுதந்திர இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதற்கு அடித்தளம் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்தது. கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களை ரேஷனில் விற்பதற்கு இந்த பட்ஜெட்டில் கணிசமாக மானியம் அறிவிக்கப்பட்டது. அப்போது நிதி நிலை அறிக்கையில் நாட்டின் மொத்த வருவாய் 171 கோடியே 15 லட்ச ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் நிதி பற்றாக்குறை 24 கோடியே 59 லட்ச ரூபாயாக அப்போது இருந்தது.

குடியரசு ஆன பிறகு முதல் பட்ஜெட்

இந்தியா குடியரசு ஆன பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகித்தது. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜான் மாதாய். பல்வேறு துறைகளில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் திட்டக் கமிஷன் அமைப்பதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது அந்த பட்ஜெட்தான்.

வேளாண் புரட்சிக்கு வித்திட்ட பட்ஜெட்

நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1950ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1956ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 6 வருடங்களாக நிதியமைச்சராக இருந்தவர் சி.டி.தேஷ்முக். நேரு அமைச்சரவையில் நீண்ட காலம் நிதியமைச்சராக பணியாற்றியவர் அவர்தான். கடந்த  1951- 1952ம் நிதி ஆண்டுக்காக  சி.டி தேஷ்முக் தாக்கல் செய்த பட்ஜெட் இந்தியாவில் வேளாண் புரட்சிக்கு வித்திட்ட பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. பிரதமர் நேருவின் ஆலோசனைப்படி சிறந்த நீர் பாசனத்திட்டங்கள் மூலம் வேளாண்மையில் அதிக லாபத்தை ஈட்டும் வகையில் 1951ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ‘உணவை மேலும் அதிகரிக்கும்’ திட்டமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியது.

வங்கிகளை தேசிய உடைமை ஆக்கிய பட்ஜெட்

1968ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் பட்ஜெட் என்று பாராட்டுதலை பெற்றது. பல்வேறு வரிச் சீர்த்திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கலால் வரித்துறை அதிகாரிகள் தொழிற்சாலைக்கேச் சென்று முத்திரையிட்டு உற்பத்தியை அங்கீகரிக்கும் முறை இந்த பட்ஜெட்டில் ஒழிக்கப்பட்டது. இந்த நடைமுறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்தியதுடன் தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவியதாக பாராட்டப் பெற்றது. கணவன் மனைவி இருவரும் வருமானவரி கட்டினால் அவர்களில் ஒருவருக்கு படி வழங்கும் முறையும் இந்த பட்ஜெட்டில் ஒழிக்கப்பட்டது. திருமண உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துவதை தவிர்க்கவே இந்த நடைமுறை திரும்பப் பெறப்பட்டதாக மொரார்ஜி தேசாய் விளக்கம் அளித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய நடவடிக்கைளில் ஒன்று தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கியது. 14 தனியார் வங்கிகளை தேசிய உடையமாக்கும் முக்கிய முடிவை 1969ம் ஆண்டு தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார் மொராஜி தேசாய்.

பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் 

மொரார்ஜி தேசாய் பதவி விலகிய பின்னர் நிதியமைச்சர் இலாக்காவை தானே கவனித்துக்கொண்ட பிரதமர் இந்திரா காந்தி 1970 ம் ஆண்டு தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய பட்ஜெட் வரலாற்றில் பெண் ஒருவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்கிற பெருமை அந்த பட்ஜெட்டிற்கு கிடைத்தது. இந்த பட்ஜெடில் ‘வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதற்காக சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கறுப்பு பட்ஜெட்

கடுமையான பஞ்சம் இந்தியாவில் ஏற்பட்டது, 1971ம்  ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் போன்றவற்றின் தாக்கத்தால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது 1973ம் ஆண்டு நிதியமைச்சர்  Yashwantrao B. Chavan தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கை கறுப்பு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. காரணம் அப்போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை அப்போதைய மதிப்புக்கு மிக அதிகமாக 550 கோடி ரூபாயாக இருந்தது. பொது காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் போன்றவற்றை தேசிய மயமாக்குவதற்காக அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

வரிச் சீர்திருத்தங்களில் அதிரடி

வரிச் சீர்திருத்தத்தில் முக்கியத் திருப்பமாக அமைந்த பட்ஜெட்டை, 1986ம் ஆண்டு ராஜீவ்காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங் தாக்கல் செய்தார். தொழில் தொடங்க அனுமதி பெறுவதில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அடித்தளம் போடப்பட்டது இந்த பட்ஜெட்டில்தான். மறைமுக வரி விதிப்பில் வி.பி.சிங் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் தற்போதுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு அன்றே அஸ்திவாரமிட்டது.

தாராளமயமாக்கிய பட்ஜெட்

அதிகாரியாக இருந்து எதிர்பாராதவிதமாக அரசியல்வாதியாக மாறிய மன்மோகன் சிங், 1991ம் ஆண்டு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கை இந்திய பொருளாதார கட்டமைப்பையே புரட்டிப்பாடு அளவிற்கும் மிகப் பெரும் சீர்திருத்த நடவடிக்கையாக அமைந்தது. இந்தியா கடன் சுமையால் தத்தளித்த நேரத்தில் நிதியமைச்சக பொறுப்பை ஏற்ற மன்மோகன் சிங் தாராளமயமாக்கலை தனது பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினார். லைசன்ஸ் ராஜ் முறையை ஒழித்து தொழில் தொடங்குவதை எளிமையாக்கியது அந்த நிதி நிலை அறிக்கை. தாராளமயமாக்கல் இந்திய பொருளாதார புரட்சி என ஒரு பக்கம் பாராட்டுக்களைக் குவித்தாலும் மறுபுறம் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

கறுப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு திட்டம்

1996ம் ஆண்டு தேவகவுடா தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் நாட்டின் நிதியமைச்சராக முதல் முறையாக பதவி வகித்த ப.சிதம்பரம் 1997ம் ஆண்டு தான் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட்டில் பல்வேறு அதிரடிகளை வெளியிட்டார்.
தனி நபர் வருமான வரி விகிதத்தை குறைத்தது நிறுவனங்களுக்கான வரியை குறைத்தது, முந்தைய ஆண்டுகளில் செலுத்திய குறைந்தபட்ச மாற்று வரியைப் பிந்தைய ஆண்டுகளுக்கும் பயன்படுத்த அனுமதித்து போன்ற முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன. கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர தானாக முன்வந்து அதனை அறிவிக்கும் திட்டத்தையும் பட்ஜெட்டில் இடம்பெறச் செய்தார் சிதம்பரம். எந்த நேரத்திலும் கவிழாலாம் என்ற அரசியல் சூழலை எதிர்கொண்டு வந்த அரசிடமிருந்து இவ்வளவு துணிச்சலான அறிவிப்புகள் வந்தது பொருளாதார வல்லுனர்களிடையேயும், அரசியல் நோக்கர்களிடையேயும் வியப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த நிதி நிலை அறிக்கை கனவு பட்ஜெட் என சிதம்பரத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.

மில்லேனியம் பட்ஜெட்

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி மலர்ந்தபோது 2000 ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. கம்ப்யூட்டர்கள், அதன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கான வரியை குறைத்தது முதல் மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புகள் வரை இந்தியாவை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற வகைசெய்யும் பல்வேறு அறிவிப்புகள் யஷ்வந்த் சின்ஹாவின் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. புதிய நூற்றாண்டு தகவல் தொழில்நுட்பத்தையே மையப்படுத்தியதை என்பதை உணர்த்துவது போல் அமைந்த இந்த நிதி நிலை அறிக்கை மில்லேனியம் பட்ஜெட் என கொண்டாடப்பட்டது. 

வரிவிதிப்பில் புதிய அத்யாயம்

வரி விதிப்பு முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி சரக்கும் மற்றும் சேவை வரி திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. நாடெங்கிலும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை ஜிஎஸ்டியால் கொண்டு வரப்பட்டது. பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியையும் அதன் எதிரொலியாக ஏற்படும் விலை மாற்றங்களையும் அவ்வப்போது நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மூலம் தீர்மானிக்கப்படும் ஒரு புதிய அத்யாயம் தொடங்கியது. ஜிஎஸ்டி அறிமுகமான பின்னர் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அதற்கேற்ப பல்வேறு மாறுதல்களை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த பட்ஜெட்டும் இந்திய பட்ஜெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட்

பட்ஜெட் உரைகளின் நீளமும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் ஆர்.கே.சண்முகம் செட்டி வாசித்தது 39 பத்திகள் மட்டுமே. ஆனால் காலம் செல்லச் செல்ல பட்ஜெட் உரைகளின் நீளம் நீண்டு கொண்டே வந்தது. நீண்ட நேரம் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் வாசித்தவர் என்கிற பெருமையை தற்போது மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி 2020-2021ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை 2 மணி நேரம் 42 நிமிடத்திற்கு நிர்மலா சீதாராமன் வாசித்தார். 

இந்திய பட்ஜெட் வரலாற்றில் அதிகமுறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர் என்கிற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். மொத்தம் 10 முறை அவர் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத்  தாக்கல் செய்துள்ளார். 1964, 1968 ஆகிய இரண்டு லீப் வருடங்களில் தனது பிறந்த நாளான பிப்ரவரி 29ந்தேதி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் மொரார்ஜி தேசாய். பிறந்த நாளில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வாய்ப்பு அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மொரார்ஜி தேசாய்க்கு பிறகு அதிக பட்ஜெட்டுக்களை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம். தேவகவுடா ஆட்சி காலத்தில் இரண்டு முறை, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 7 முறை என மொத்தம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் சிதம்பரம். ஒய்.பி.சவான், சி.டி.தேஷ்முக், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் 7 முறை மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து அதிக பட்ஜெட்டுக்களை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் வடிவத்தையும் கட்டமைப்பதில் பட்ஜெட்டின்போது எடுக்கப்படும் முடிவுகள் முக்கிய காரணிகளாக அமைவதால் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த படியாக மக்களின் கவனம் அதிக அளவு பட்ஜெட் தாக்கலில் குவிகிறது. அரசின் வருவாயை மக்களின் சேவை திட்டங்களுக்காக பகிர்ந்தளிப்பது பட்ஜெட்தான். எனவே வறுமையை ஒழிப்பது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என பல்வேறு முனைகளிலிருந்து எழும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய பட்ஜெட் ஆணிவேராக அமைந்துள்ளது. சமூகத்தின் ஏற்றுத் தாழ்வுகளை களைவதிலும் ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கும் மத்திய பட்ஜெட் பாரபட்சங்கள் அற்றதாக நாட்டின் பொருளாதார வளங்களை எல்லா தரப்பினருக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுப்பதாக அமைய வேண்டும்.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

G SaravanaKumar

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

Saravana

கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து

EZHILARASAN D