தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் 2026 – சு. வெங்கடேசன் பேட்டி..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டானது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

இந்த பட்ஜெட் முழுவதுமாக ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட். மக்களை சுரண்டும் வகையில் தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்காக ஒரு அறிவிப்பு கூட இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவத்திற்கு மூன்று முக்கிய அறிவிப்புகள் வந்திருக்கிறது. ஆனால் சித்த மருத்துவத்திற்கு எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒரு பட்ஜெட். ரயில்வே திட்டம் புதிய தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

அரிய வகை கனிமங்களை சுரண்டும் திட்டங்கள் தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரிய வகை கனிமங்கள் மாநில வசம் இருந்த நிலையில் அதனை மத்திய அரசுக்கு மாற்றி தற்போது அதனை சூறையாடுவதற்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இது முழுமையாக வளங்களை திருடுவதற்கான அறிவிப்பாக தான் இது பார்க்கிறோம் .

இந்த பட்ஜெட் 2047ல் சுதந்திர நூற்றாண்டை நோக்கியது என்று மத்திய நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அந்த 2047ல் தமிழ்நாட்டை ஒதுக்கிவிட்டு செல்கிறதா பட்ஜெட்…?. மதம் சார்ந்த விஷயங்களை கவனம் செலுத்தும் வகையில் தான் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இந்த பட்ஜெட்டை எந்த வகையிலும் எங்களால் வரவேற்க முடியாது. எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.