FIFA உலகக் கோப்பை 2022 – தொடக்க விழாவில் BTSன் ஜுங்கூக்

கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில், தென்கொரிய இசைக்குழுவான BTSன் உறுப்பினர் ஜுங்கூக் பங்கேற்கிறார். பிரபல தென்கொரிய ஆண்கள் இசைக்குழு BTS. இதன் இளைய உறுப்பினரான ஜுங்கூக் (Jungkook)…

கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில், தென்கொரிய இசைக்குழுவான BTSன் உறுப்பினர் ஜுங்கூக் பங்கேற்கிறார்.

பிரபல தென்கொரிய ஆண்கள் இசைக்குழு BTS. இதன் இளைய உறுப்பினரான ஜுங்கூக் (Jungkook) வரும் நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் நடைபெற உள்ள FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022ன் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக BTSஐ நிர்வகிக்கும் நிறுவனமான BigHit Entertainment அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஜுங்கூக், FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் 2022ன் பாடல் ஒலிப்பதிவின் ஒரு பகுதியாக இருப்பதையும், உலகக் கோப்பை தொடக்க விழாவில் அவர் அதை அரங்கேற்றுவார் என்பதையும் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். காத்திருங்கள்!” என்று தெரிவித்துள்ளது.

BTSன் மூத்த உறுப்பினரான ஜின்னின் (Jin) இராணுவ சேர்க்கை அறிவிக்கப்பட்ட பின்னர் இசைக்குழு இடைநிறுத்தப்பட்டதால், BTSன் உறுப்பினர்கள் பலரும் இப்போது தனித் திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஜே-ஹோப்பின் தனி ஆல்பம் ’ஜேக் இன் தி பாக்ஸ்’, கோல்ட்ப்ளே என்ற ஆங்கில இசைக்குழுவுடனான ஜின்னின் ஆல்பம் ‘தி அஸ்ட்ரோனாட்’, RM-ன் முதல் தனி ஆல்பமான ‘இண்டிகோ’ ஆகியவை குறித்த அறிவிப்பை பிக் ஹிட் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. சில மாதங்களுக்கு முன்பு, ஜுங்கூக், பிரபல பாடகர் சார்லி புத்துடன் இணைந்து ’லெஃப்ட் அண்ட் ரைட்’ என்ற பாடலை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷகிரா, டூவா லிபா, ஜே பால்வின், பிளாக் ஐட் பீஸ், டிப்லோ, கிஸ் டேனியல், கால்வின் ஹாரிஸ், நோரா ஃபட்டேஹி மற்றும் டிரினிடாட் கார்டோனா ஆகியோரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022ன் தொடக்க விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக, FIFA உலகக் கோப்பையின் ஒலிப்பதிவுகள், பாப் கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளன. குயினின் ’வீ ஆர் தி சாம்பியன்ஸ்’, ஷகிராவின் ’வாகா வாகா’ மற்றும் பிட்புல்லின் ’வீ ஆர் ஒன் (ஓலே ஓலா)’ ஆகியவை உலகம் முழுவதும் இன்னும் பிரபலமாக இருக்கும் சில FIFA கீதங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.