கர்நாடகா மாநில முதலமைச்சர் வரும் 26ம் தேதிக்குப் பிறகு முதலமைச்சராக தொடர மாட்டேன் என்று கூறி வருவதை அடுத்து அவர் பதவி விலக உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று வரும் 29ம் தேதியுடன் இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது கட்சியினர் டெல்லி மேலிடத்தில் பல்வேறு புகார்களை கூறியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சியில் தலையிடுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து எடியூரப்பாவை டெல்லி வருமாறு மேலிடம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து எடியூரப்பாவும், அவரது மகனும் கடந்த 16ம் தேதியன்று டெல்லி சென்றனர். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடியூரப்பா சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் பெங்களூரு திரும்பிய அவர், வரும் 26ம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனவே அன்றைய தினம் தன்னுடைய ராஜினாமா முடிவை அதிகாரப்பூர்வமாக எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனிடையே கடந்த 22ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மேலிடம் கேட்டுக் கொண்டால் நான் பதவி விலக தயாராக இருக்கின்றேன் என 2 மாதத்துக்கு முன்பே சொல்லியிருக்கின்றேன்,” என சுட்டிக்காட்டினார்.
இன்னொரு புறம் பாஜகவின் வலுவான ஓட்டு வங்கியாக கருதப்படும் லிங்காயத் சமூகத்தினர் எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். மைசூரு மற்றும் சாம்ராஜ் நகரில் உள்ள லிங்காயத் மடங்களை சேர்ந்த ஜீயர்கள் கடந்த 22ம் தேதியன்று பெங்களூருவில் முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து பேசினர். லிங்காயத் சமூகத்தினர் எடியூரப்பாவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எடியூரப்பா மறைமுகமாக நெருக்கடி தருவதாக டெல்லி மேலிடத் தலைவர்கள் கருதுகின்றனர்.
மேலிடத்தின் கோபத்தை அறிந்த எடியூரப்பா கடந்த 22ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “உங்களுடைய (ஆதரவாளர்கள்) நல்லெண்ணம் என்பது ஒழுங்கீன வரம்பை மீறுவதாக இருக்கக் கூடாது. எனக்கு கட்சி என்பது தாய்போன்றதாகும். கட்சியை அவமதிப்பது எனக்கு வலியைத் தருகிறது. என்னுடைய நலன் விரும்பிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்”என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் எடியூரப்பாவுக்குப் பதில் புதிய முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் யூகங்கள் கிளம்பியுள்ளன. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஊடங்கள்தான் இதனை விவாதித்துக் கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் எடியூரப்பாவை மேலிடம் விலக சொல்லி இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. என்னிடம் மேலிடத்தில் யாரும் இது குறித்துப் பேசவில்லை. எனவே இந்த விஷயம் குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை,” என்று கூறினார்.
58 வயதான பிரகலாத் ஜோஷி 2004ம் ஆண்டு முதல் தார்வாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு முதல் 2016 வரை கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே இவர் அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.








