தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.
கர்நாடகாவில் மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற் கான முயற்சியில் அம்மாநில அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டின் நீராதாரமாக விளங்கும் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படுவதை தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேகதாது அணை குறித்து கடந்த 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்களின் படி, நேற்று தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே நாளில் டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியை இரவு 7 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், மேகதாது அணை விவ காரம் தான் முக்கிய விவாதப் பொருளாக இருந்திருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான், முதலமைச்சராக பொறுப்பேற்றபின் 2-ம் முறையாக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ளார். அது மட்டுமின்றி தான் முதலமைச்சரானபின், முதல் முறையாக குடியரசுத் தலைவர் சந்திக்கவுள்ளார் என்பதும் கூடுதல் கவனம் பெறுகிறது.
கடந்த மாதம் டெல்லியில் பிரதமரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவரிடம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில் மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இந்நிலையில் தான் குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது எவை குறித்தெல்லாம் அலோசிக்கப் படலாம் என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.
குடியரசுத் தலைவருடனான முதல் சந்திப்பில், எழுவர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. நீட் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், கர்நாடக முதலமைச்சரை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் டெல்லி பயணம், சூடுபிடித்திருக்கும் அரசியல் களத்தில் மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.







