நிம்மதி எங்கே? என மனிதன் ஓடிக் கொண்டிருக்கும்போது, இசையை கேட்பதில்தான் நிம்மதி இருக்கிறது, என்பதை உணர்ந்த மனிதன் மெல்லிசை கேட்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினான்.
தமிழ்நாட்டிலும் மெல்லிசைக்கு மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தில், தனது 13-வது வயதில் மேடைக் கச்சேரி ஒன்றின் மூலம், முதல்முறையாக தன் விரல் வித்தையை அரங்கேற்றியவர். 700 திரைப்படங்களுக்கு இணை இசையமைப்பாளராக பணியாற்றியவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மெட்டமைத்து, அனைத்து தரப்பு மக்களையும், தனது இசையால் கட்டிப்போட்டு, இசை மாமன்னராக உருவெடுத்தவர்.
யார் அவர்? அவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.
1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாட்டில் தன் மெட்டுக்களால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஆளுமை செலுத்தியவர். வாழ்க்கையில் இன்பமுற்ற சூழலில் கேட்பதற்கு ஒரு வகையான மெட்டு, காதல் அனுபவத்திற்கு ஒரு மெட்டு, நம்பிக்கை துரோகம், சோகம், வலி என அனைத்து வகையான சூழலுக்கும் பொருந்துமாறு மெட்டமைத்தவர் மெல்லிசை மன்னர்.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான, ‘நீராருங் கடலுடுத்த’ என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு, மோகன ராகத்தில் இசையமைத்தவர் எம்எஸ்வி தான். இசையமைப்பாளராக மட்டும் அல்லாமல் பாடகராகவும், நடிகராகவும் தன் திறமையை பிற்காலங்களில் வெளிப்படுத்தியவர் எம்எஸ்வி.

திரைப்படங்களில் நடிக்கும்போதும், தன் ஆருயிர் நண்பர் கவிஞர் கண்ணதாசனுக்கு புகழாரம் சூட்டுவதை அவர் மறக்கவில்லை. இசைத்துறையில் சிறந்து விளங்கிய எம்எஸ்விக்கு தமிழ் இசைச்சங்கம், இசைப்பேரறிஞர் விருது வழங்கியது. தமிழ்நாடு அரசு, கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது, திரை இசைத்துறையில் தொடமுடியா பல உச்சங்களை தொட்ட மெல்லிசை மன்னர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி சென்னையில் காலமானார். எம்எஸ்வி மறைந்தாலும், காலத்தால் அழியாத அவரது காவிய மெட்டுக்கள், காற்றுள்ள வரை நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.








