கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி இடையே புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையின் ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நான்கு மற்றும் ஐந்தாவது தூண்களை இணைக்கும் வகையில் கான்கிரீட் போடப்பட்டது.
இந்த காங்கிரீட் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் இடிந்து விழுந்த பகுதியை அப்புறப்படுத்தும்பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், இடிந்து விழுந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.