ஆந்திர மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா பகுதியில் மதுரவாடா தெலுங்கு தேசம் இளைஞர் அணித் தலைவரான சிவாஜி என்பவருக்கும், ஸ்ருஜனா என்ற பெண்ணுக்கும் திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஆந்திர முறைப்படி மணமகள் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான சீரகம் வைபவம் எனும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஸ்ருஜனா, மணமகன் சிவாஜி மடியில் மயங்கி விழுந்தார். தாலி கட்டுவதற்கு சிறிது நேரமே இருந்த நிலையில், மணமகள் மயங்கி விழுந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மணமகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, ஸ்ருஜனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மருத்துவப் பரிசோதனையில் மணமகள் விஷம் அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணமகன் மடியிலேயே மணமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement: