அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்காக அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்த, அரசு முடிவு செய்தது. அதன்படி, நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இதனைத்தொடரந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர்; உயிர் கொடுத்த அரசாக திமுக அரசு உள்ளது.
காலை உணவுத் திட்டத்திற்காக அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு. காலை உணவுத் திட்டத்தால் எதிர்கால தமிழ் சமுதாயம் ஏராளமான பயன்களை பெறும். காலை உணவு கிடைக்க வேண்டும், மாணவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு இருக்க கூடாது, ரத்த சோகையை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவு இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்.
உதவ யாரும் இல்லை என கலங்கும் மக்களுக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும்.
இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன்கள் காலம். காலை, மதிய உணவை நாங்கள் வழங்குகிறோம், குழந்தைகளே படியுங்கள்; படிப்பு மட்டும்தான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து; நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், படிப்பு உங்களை உயர்த்தும். காலை உணவே சாப்பிட முடியாத பிள்ளைகளால் எப்படி படிக்கமுடியும்; பசிப்பிணி நீங்கிவிட்டால் மாணவர்கள் மனநிறைவோடு படிப்பார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







