தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பாக அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். எனினும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து சுமத்தி வந்தார். தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து திருடிக்கொண்டதாக டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஏற்கெனவே, இது தொடர்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது.
இந்நிலையில், தங்கள் மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரமப் நீதிமன்றத்தில் சரண் அடைவேன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, அட்லாண்டா சிறையில் முன்னாள் டிரம்ப் சரணடைந்தார். அப்போது சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.







