இந்தியா வருகிறார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர்…!

ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்காக நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆசிய நாடுகளில் தகுதி பெரும் கிளப் அணிகள் போட்டியிடும். அதன்படி, இந்தியாவின் சூப்பர் லீக் சாம்பியன் அணியான மும்பை சிட்டி எஃப்சி அணி…

ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்காக நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆசிய நாடுகளில் தகுதி பெரும் கிளப் அணிகள் போட்டியிடும். அதன்படி, இந்தியாவின் சூப்பர் லீக் சாம்பியன் அணியான மும்பை சிட்டி எஃப்சி அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே இந்த தொடரில் D குரூப்பில் இந்தியாவின் மும்பை சிட்டி எஃப்சி அணியுடன், சவுதி அரேபியாவின் அல் ஹிஹால், ஈரானின் நசாஜி மாசந்தரன் எஃப்சி, உஸ்பெகிஸ்தானின் நவ்பஹோர் நாமங்கன் உள்ளிட்ட நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரின் லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் ஒரு போட்டியும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒரு போட்டியும் விளையாட வேண்டும். எனவே இந்தியாவின் மும்பை சிட்டி அணியுடன், சவுதியின் அல் ஹிஹால் அணி விளையாடும் அட்டவணைப் படி, அல் ஹிஹால் இந்தியா வந்து விளையாட வேண்டும். இதில் சிறப்பு என்னவென்றால், பிரேசில் அணியின் நட்சத்திரமான நெய்மர் அண்மையில் அல் ஹிஹால் அணிக்கு விளையாட இரண்டு வருடத்திற்கு 815 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்தியா வருகை தரும் அல் ஹிஹால் அணிக்காக நெய்மர் விளையாடுகிறார் என்பதால், நெய்மர் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. இந்திய மண்ணில், கேரளா மற்றும் வட மாநிலங்களில் கால்பந்து விளையாட்டின் மோகம் தழைத்தோங்கி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே பிரேசில் நட்சத்திரம் நெய்மர் இந்தியா வருவதை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல் நசர் அணியானது இந்தியாவுடனான D குழுவில் இடம் பெறவில்லை, மாறாக E குழுவில் இடம் பெற்றுள்ளதால், அந்த அணி இந்தியாவுடன் லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. அல் நசர் அணியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ இருப்பதால் ரொனால்டோ இந்தியா வருவார் என பெரும் எதிர்பார்ப்பிலிருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், பிரேசிலின் நெய்மர் இந்தியா வருவது உறுதியானதால் அந்த தருணத்திற்காக இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா வரும் அல் ஹிஹால் அணி, மும்பை சிட்டி எப் சி அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் உள்ள ஶ்ரீ சிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்பிளாக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மும்பை அணியின் சொந்த மைதானமாக கருதப்படும் அந்தேரியின் மும்பை புட்பால் அரேனா மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்த பட்டு வரும் நிலையில், போட்டியானது புனேவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை, போட்டிகளுக்கான அட்டவணை உள்ளிட்டவனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. நெய்மர் இந்தியா வருவதால் இந்திய ரசிகர்கள், குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான ரசிகர்கள் புனே சென்று போட்டியை பார்க்க திட்டமிட்டிருப்பர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.