நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை இன்றி மூளையில் இருந்த கட்டியை கதிரியக்க சிகிச்சை மூலம் அகற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை, தமிழக அரசு மருத்துவமனையில் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. நோயாளிக்கு வயது 56.
மண்டை ஓடு அல்லது எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் திறக்காமல் இந்த சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் பெரிய அறுவை சிகிச்சையும் மயக்கமருந்து நடைமுறைகளும் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சிகிச்சையின் முடிவுகள் அறுவை சிகிச்சைக்கு ஒத்ததாக இருக்கும்.
நோயாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே நாளில் இந்த சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சைக்கு நோயாளியும் நன்கு ஒத்துழைத்தார்.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை ஆகும்.
அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் செய்யப்படும் எந்த முதலீடும் 10 மடங்கு பலனைத் தரும் என்று இந்தத் தகவலை சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மகாராஜன் என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மரபு வழி, புகையிலை பழக்கங்கள் போன்றவை மூளையில் கட்டி வருவதற்கு பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது.








