மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து…

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான் திருக்கோயில் மாடவீதியில் தினந்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி காலை, மாலை இருவேளையும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிலையில் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை உற்சவர் முருகப்பெருமான் – வள்ளி தெய்வயானை சிறப்பு தங்க ஆபரணம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளினார்கள். தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருக்கோயில் மாடவீதியில் உலா வந்து உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற ஒன்பதாம் நாள் மாசி திருவிழாவில் இருளர் சமுதாய மக்கள் மலை அடிவாரத்தில் இருந்து வள்ளியம்மை தாயாருக்கு மேலத்தாளங்களுடன் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து மலைக்கோவிலில் வழங்கினர். பின்னர் அதிகாலை உற்சவர் முருகப்பெருமானுக்கும்-வள்ளியம்மைக்கும் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல், கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மாசி மாத தேர் திருவிழா நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தான்டிற்கான மாசிமகா தேர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து தினந்தோறும் அரங்கநாத பெருமாள் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை பெட்டத்தம்மன் அம்மன் மலையிலில் இருந்து அம்மன் அழைத்து வரபட்ட நிலையில், அரங்கநாதசுவாமிக்கு – ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் நடைப்பெற்ற இந்த திருகல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.