“பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் இன்னும் லவ் படங்களில் நடிக்கிறார்” – ‘மிஸ் யூ’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் #Karthi பேச்சு!

பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்தார். கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு. அருண்குமார்…

"Boys is Siddharth so he still does love films" - Actor #Karthi speaks at 'Miss You' trailer launch!

பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘மிஸ் யூ’. இப்படம் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தை இயக்கியவராவார். ‘மிஸ் யூ’ திரைப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.23) மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசியதாவது,

“இங்கு வந்து அமர்ந்த சிறிது நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் அங்கிருந்த அனைவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தார். அதற்கு சித்தார்த்தை நடிக்க மட்டும் செய்யும்படி மணி சொன்னார். இங்கும் “லைட்டை திருப்புங்க. கதவை மூடுங்க” என.. சித்தார்த் அதைதான செய்துக்கொண்டிருக்கிறார்.

என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த சமயத்தில் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் அனைவரும் சினிமாவை பற்றி அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பேசும்போது, ” மறுபடியும் நாம் கடைசி பென்ச் தான் போல.. இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே.. நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே” என்று தோன்றியது. சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் போதாது.. நிறைய படிக்க வேண்டும்.. கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் தெரிந்துக்கொண்டேன்.

இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம்ம பசங்க எல்லாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’.. ‘மிஸ் யூ’. அதில் மிகவும் கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார்கள். விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பாடல்கள், காதல் உள்ளிட்டவைகளை இப்போது பார்த்தாலும் உற்சாகமூட்டுவதாக இருக்கும். தற்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் மொழி தெரியாவிட்டாலும் முழு ஈடுபாடுடன் நடிக்கிறார்”

இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.