தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதாக கூறி காதலியின் புகைப்படத்தை இணையத்தில் கசிய விட்டுவிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டு காதலன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மூவேந்தர் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த முகேஷ் (22) என்ற இளைஞருக்கும் காதலித்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் முகேஷின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த மாணவி அந்த இளைஞர் உடனான காதலை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் காதலித்த நாட்களில் அந்த மாணவியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் மாணவியின் சகோதரரிடம் தொடர்பு கொண்டு தனது 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு மாணவியை கல்லூரியை விட்டு வெளியே வரச் சொல்லி அவரிடம் இருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி மாணவி நாகர்கோவில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து, முகேஷ் மிரட்டலில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.