#NaliniPlea | #Dismissed | #News7Tamil | #News7TamilUpdate
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததுபோல், நளினியையும், ரவிச்சந்திரனையும் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யமுடியாதது ஏன் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை சுட்டிக்காட்டி தனக்குள்ள பிரத்யேக அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்தது போல் நளினையையும், ரவிச்சந்திரனையும் உயர்நீதிமன்றம் விடுவிக்குமா என்கிற பரபரப்பு நிலவி வந்த நிலையில், இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
1) ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி
செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.
2) இந்திய அரசியல் சாசனம் 161 வது பிரிவின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்வது
தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம்
தெளிவுபடுத்தியுள்ளது.
3) ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம், அவரது ஒப்புதல்
இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது.
4) அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தாமதித்ததால் ஆளுநர் ஒப்புதல்
தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
5) பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை
செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, தனது சிறப்பு அதிகாரத்தை
பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அதுபோன்ற சிறப்பு அதிகாரம் உயர்
நீதிமன்றங்களுக்கு இல்லை.
6) ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கினாலும் அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.
7) அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அமைச்சரவை தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் 7 பேரையும் விடுதலை
செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.