காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.  மதுராவில் ஹேமமாலினியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விஜேந்தர் சிங் போட்டியிடுவார் என இரண்டு நாட்களுக்கு…

சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

மதுராவில் ஹேமமாலினியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விஜேந்தர் சிங் போட்டியிடுவார் என இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஊகங்கள் நிலவியது.  இந்நிலையில்,  விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.  பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே அவரை வரவேற்று கட்சியில் உறுப்பினராக்கினார்.  குத்துச்சண்டையில் விஜேந்தர் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை பெற்றுள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்புதான் விஜேந்தர் சிங் அரசியலில் நுழைந்தார்.  இவர் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  ஆனால், தேர்தலில் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார்.  பிதுரி 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார்.  ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா 3 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும்,  விஜேந்தர் 1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளும் பெற்றனர்.

வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றுவதற்காக விஜேந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தாவ்டே கூறினார்.  மேலும் அவரது வருகை கட்சியை மேலும் பலப்படுத்தி இலக்கை நோக்கி செல்லும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.