எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: உதயநிதி மற்றும் கனிமொழி வீரவணக்கம்!

நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது முறையல்ல, ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகத் தொடர வேண்டும் என்றும், நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள் இது என்று திமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும், மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் அமைந்த இந்நாளில், தமிழர் நிலத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடிய எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம்! தாய்நிலத்தின் உரிமையையும் எல்லைகளையும் காக்கப் போராடிய அவ்வீரர்களின் தியாகங்கள், தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்! அவர்கள் மீட்டுத் தந்த மண்ணையும் மாநில உரிமைகளையும் காப்போம்; கூட்டாட்சியை உயர்த்திப் பிடிப்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.