தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தணிக்கைச்சாவடியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிறு முழு ஊரடங்கு 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார்.
மேலும், விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள், கடைகள், மண்டபங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்த அவர், தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.








