உலகம் முழுவதும் வசூலை குவித்து வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. இது குறித்த பிரபலங்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதன் முதல் பாகம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது போல், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போல் பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து எடுத்து கொள்ளப்படுகின்றன. இது சினிமாவிலும் நடந்து வருகிறது என பேசியிருந்தார். அவர் பேசியதை நடிகர் கமல்ஹாசனும் ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் சர்ச்சைகளை உண்டாக்கிய நிலையில் சோழர்களின் கொடியான புலிக்கொடி மறைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, ஒரு தயாரிப்பாளராக சர்ச்சைகளை வரவேற்கவே செய்கிறேன். சர்ச்சைகள் வந்தால் தான் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.
ராஜ ராஜ சோழன் இந்துவா, புலிக்கொடி போன்ற சர்ச்சைகள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை மேலும் அதிகரிக்க செய்யும் என தயாரிப்பாளர் கே. ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் பொன்னியின் செல்வன் என்னும் தமிழ் திரைப்படம் தமிழையும், தமிழர்களின் பெருமைகளையும் உலக அரங்கில் மிளிர வைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- தினேஷ் உதய்








