கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூரில் தனியார் நிறுவனத்தின் பாயிலர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே, முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் அந்த டேங்க் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துள்ளது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் வெளியே வந்தனர். மேலும் டேங்க் வெடித்த விபத்தில் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத் திறணலால் பாதிக்கப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கழிவுநீர் மிகவும் சூடாக இருந்தால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனியார் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் திடீரென கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் கதிரவன், தாசில்தார் மகேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

மேலும் எங்கள் பகுதி மக்களுக்கும் இந்த நிறுவனத்தில் வேலை தருவதில்லை. இப்பொழுது வெளியேறிய கழிவு நீரால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து போலீசார் நிறுவனத்திடம் பேசி உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.