காங்கோவில் படகு தீப்பிடித்து விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான வடமேற்கு காங்கோவில் படகு போக்குவரத்து அங்குள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டுள்ளது.

அந்தப் படகில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த படகு பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்புவதற்காக பலர் ஆற்றில் குதித்துள்ளனர். அப்போது துரதிஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதில் சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இது குறித்த விசாரணையில் படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.