கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதி 11பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தியா முழுக்க பல சுற்றுலாத் தளங்களில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை படகு சவாரியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் மொத்தம் 40 பேர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கியவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் பகுதியில் ஒருவரது இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் கும்பலாக படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் கேரள அமைச்சர் ரியாஸ் கான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.







