மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – பாலம் சேதம்!

மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  பதிவான…

மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு,  அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அந்த வகையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது.  இதில் மணிப்பூரிலும் வாக்குப்பதிவு நடந்தது.

கலவரத்தால் பெரும் பதற்றத்தில் இருக்கும் மணிப்பூரில்,  வாக்குப்பதிவு நாளின்போதும் கலவரம் வெடித்தது.  வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு,  மிரட்டல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதப்படுத்துதல் போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இவ்வாறு சமூக விரோத செயல்கள் நடந்த 11 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டது.  அந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம் மறுதேர்தல் நடந்தது.  இதனையடுத்து, மணிப்பூரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஒரே இரவில் 3 முறை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இச்சம்பவம் தேசிய நெடுஞ்சாலை சபர்மேனா அருகே நிகழ்ந்துள்ளது.  இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.  இதில் பாலம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.