ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் இருக்க, அதிமுகவில் நிலவும் குழப்பம், தேர்தல் பணிமனை பதாகையே விவாதப் பொருளாவது ஏன்? முதலில் தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக இன்னும் முடிவு எடுக்காத காரணம் என்ன ? இவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு சட்டபேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ், அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள், அமமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 முனைப் போட்டி தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதலில் தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. அக்கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள், தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடர் ஆலோசனை செய்தும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுயேச்சை சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவது உறுதி, அதேநேரத்தில், பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரைத் திரும்ப பெறுவோம் என்கிறார் ஓபிஎஸ். ஆனால், நாங்கள் போட்டியிடுகிறோம், கூட்டணிக் கட்சிகள் ஆதரியுங்கள் என்கிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் என்று தேர்தல் பணிமனை அலுவலகத்தையும் அமைத்துள்ளனர் இபிஎஸ் தரப்பி. ஒரே நாளில் 3 விதமாக அமைந்த பதாகையே விவாதப் பொருளாகியுள்ளது தனித்து நிற்க தயாராகி விட்டாரா இபிஎஸ் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம் என்று பாஜக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை என்று களமிறங்கி விட்டது ஈபிஎஸ் தரப்பு. இதன் வெளிப்பாடுதான் பாஜகவையும் அதை சார்ந்தும் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைத் தவிர்த்து பேனர் வைத்தது என்கிறார்கள். மேலும், பாஜகவைத் தவிர்த்து, எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறலாம் என்கிற ஓட்டு கணக்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால், பாஜகவின் கோபத்திற்கு தற்போது ஆளானாலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. அதற்குள் கோபத்தை சரி செய்து விடலாம் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, இடைத் தேர்தலில் வெற்றி இரண்டாம் பட்சம்தான். அமமுக, ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இருவரும் பெறும் மொத்த வாக்கை விட, அதிக வாக்கு வித்தியாசம் பெற வேண்டும். தங்களது செல்வாக்கை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதுதான் இபிஎஸ் அணியின் முதல் இலக்காக இருக்கிறதாம். ஆகையால்தான், இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் போட்டியிடுவோம் என்கிற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து என்கிறார்கள்.
இந்நிலையில், பாஜகவைப் பொறுத்தவரை வரும் மக்களவைத் தேர்தல்தான் நமது இலக்கு. இந்த இடைத் தேர்தலில், பலம் மிக்க திமுக கூட்டணியை எதிர்க்க வலிமையான ஒரு பொது வேட்பாளர் வேண்டும் என்கிற அக்கட்சியின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நடைமுறை பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் குறிப்பிடும் பொது வேட்பாளர் என்பது பாஜக வேட்பாளராகவும் இருக்கலாம். இதன் மூலம் வருங்கால கூட்டணியை இப்போதே கட்டமைக்கலாம். வலிமையான எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து நிற்பதை விட கூட்டணிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்துள்ளதால், இடைத்தேர்தல் வெற்றியை விட எதிர்கால இலக்குதான் முக்கியம் என்று டெல்லி மேலிடம் கருதுகிறது. ஆகையால்தான், முதலில் தேர்தல் பணிக்குழுவை அமைத்தாலும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. ஆகையால், இந்த இடைத் தேர்தலை அமைதியாக கடந்து விடலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்று இருக்கிறது
எனவே போட்டியா? புறக்கணிப்பா? நடுநிலையா? என்பதையெல்லாம், அதிமுகவின் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு பிறகு, அறிவிப்பார்கள் என்கிறார்கள். பாஜகவின் தேர்தல் வியூகம் பலிக்குமா…? ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இணையுமா? இரட்டை இலை என்னவாகும்? விரைவில் விடை கிடைக்கும்.
இது குறித்த காணொளியை காண…