காஷ்மீரைப் போல மணிப்பூரின் 370C பிரிவையும் நீக்குவதுதான் பாஜகவின் நோக்கம் – நியூஸ்7 தமிழ் கேள்வி நேரத்தில் தியாகு வாதம்!

காஷ்மீரைப் போல மணிப்பூரின் 370C பிரிவையும் நீக்குவது தான் பாஜகவின் நோக்கம் என நியூஸ்7 தமிழ் கேள்வி நேரத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தெரிவித்தார்.  வடகிழக்கு மாநிலங்களின்…

காஷ்மீரைப் போல மணிப்பூரின் 370C பிரிவையும் நீக்குவது தான் பாஜகவின் நோக்கம் என நியூஸ்7 தமிழ் கேள்வி நேரத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தெரிவித்தார். 

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது.

கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலிக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து 11 நாட்கள் காவலில் எடுத்துள்ளது.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு பேசியதாவது:

மணிப்பூரில் உள்ள அடிப்படை சிக்கலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூரை இந்தியாவோடு இணைக்கும்போது 370C எனும் பிரிவு தரப்பட்டது. பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்காக காஷ்மீருக்கு 370ஐப் போல மணிப்பூருக்கு இந்த பிரிவு வழங்கப்பட்டது.

இதன் மூலம் பழங்குடி மக்களுக்கான தன்னாட்சி மன்றம் ஒன்று அமைக்க வேண்டும். திரிபுராவில் ஏற்கனவே இந்த மன்றம் அமைக்கப்பட்டது, மணிப்பூரில் அமைக்கப்படவில்லை. தன்னாட்சி மன்றம் அமைப்பது குக்கி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை முறியடிக்க பாஜக ஒரு வியூகத்தை முன்வைத்தது. அதன்படி பழங்குடி அல்லாத மக்களும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி போராடுவதற்கு பாஜக தூண்டிவிட்டது. மணிப்பூரில் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்கு புதிய தாரளமயக் கொள்கை வழிவகை செய்கிறது. அதற்கு தடையாக மணிப்பூரின் 370C உள்ளது.

எப்படி காஷ்மீரின் 370 பிரிவினை அகற்றி பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வழிவகை செய்ததோ அதேபோல மணிப்பூரின் 370C பிரிவை அமலில் இருந்த போதும் அதனை இல்லாமலாக்கி வளங்களை சுரண்டுவதற்கு திட்டங்களை தீட்டி வருகிறது.

பழங்குடி மக்களின் பாதுகாக்கப்பட்ட நிலங்களை , காடுகளை கைப்பற்றுவதான் பாஜக அரசின் நோக்கம். இந்த பின்னணியில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை அணுக வேண்டும்”

இவ்வாறு தியாகு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.