பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளர் ராகேஷ் சிங் தனக்கு சதி செய்வதாக பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து சுமார் 100 கிராம் அளவிலான கொக்கைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க போலீஸார், பமீலா கோஸ்வாமி போதைப்பொருள் வாங்க அந்தப்பகுதிக்கு வரவிருப்பதாக எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. இதனால், அந்தப்பகுதியில் நாங்கள் முன்கூட்டியே பெண் போலீஸாரை அந்தப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தி அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது நண்பர்களான பிரபீர் குமார் மற்றும் பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பமீலா கோஸ்வாமி, பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளர் ராகேஷ் சிங் தனக்கு சதி செய்வதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.







