தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாக செல்லும் வகையில் மேப் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கார் பயணத்தில் உலக சாதனை படைத்த தொழில்முனைவோரான சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
கார் மூலம், தமிழகம் முழுவதும் 51 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 550 கிலோ மீட்டர் பயணம் செய்து சசிகுமார் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயன்ஸ் கிளப் சார்பில் இந்த சாதனை பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த சாதனை பயணம், சென்னையில் நிறைவடைந்தது. இதையடுத்து, அவருக்கு, ஆஷஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த சாதனை பயணத்தை தான் மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில், மேப் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதனை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதகாவும் சசிகுமார் தெரிவித்தார்.







