திமுக அரசு ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை நடத்தி காட்டட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சிவகங்கையில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசு கடந்த ஒரு ஆண்டு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக மட்டுமே மாறியுள்ளது என்றார்.
ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளதாகவும், அந்த ஊழலில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை என்றும் குற்றம்சாட்டினார். பொங்கல் தொகுப்பு முறைகேடு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், சிறிய தவறு நடந்துவிட்டதாகவும் அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் அனைத்தும் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு நிறுவனங்கள் கூட கருப்பு பட்டியலில் வைக்கவில்லை. ஏன்
என்றால் அவை அனைத்தும் கோபாலபுரத்தில் உள்ளவை என அண்ணாமலை விமர்ச்சனம் செய்தார்.
ஆண்டுக்கு 24 லட்சம் பெண்கள் கர்ப்பிணிகளாக உள்ளனர். அவர்களுக்கு கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அம்மா பெட்டகம் திட்டம் அறிவித்து அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து
மாவை பொங்கல் தொகுப்பு வழங்கிய அதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு 24 லட்சம் தாய்மார்களுக்கு வழங்கியுள்ளது. பொங்கல் தொகுப்பே தரமில்லாமல் வழங்கப்பட்ட நிலையில் அதே நிறுவனம் இந்த ஊட்டச்சத்து மாவை வழங்கினால் தாயும், குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக அரசு ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழ்நாட்டில் நடத்தி காட்டட்டும் என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார்.
ஆனால் திமுகவால் அது முடியாது என்ற அவர், லஞ்சம் வாங்குவதில் ஊன்றுகோலாக இருப்பதே திமுக அரசுதான் என்றார். இதே நேரத்தில் பிரதமர் மோடி செய்த சாதனைகளை நினைவுகூறுங்கள் என தெரிவித்த அண்ணாமலை, இந்த மாவட்டத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்று செய்திகளில் வருவதை காட்டிலும் தினமும் முறைகேடு வழக்குகளுக்காக செய்திகளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் பக்கமும் விமர்சனம் செய்தார்.
– இரா.நம்பிராஜன்








