பிராந்திய கூட்டணி கட்சிகளை பாஜக வலுவிழக்க செய்து வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறித்துக் கொண்டது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. அக்கட்சியின் தலைவரும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதலமைச்சராக பதவி வகித்து வந்தவருமான நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் பாராமதியில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறியதாவது:
பிராந்திய கட்சிகளுடனான கூட்டணியை எப்படி வலிமையிழக்கச் செய்வது என்று பாஜக திட்டமிட்டு வந்தது. ஆனால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எச்சரிக்கையுடன் அக்கட்சியுடன் எடுத்துள்ளார்.
சமீப காலம் வரை அகாலி தளம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. அக்கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பாஜகவுடன் இருந்தார். ஆனால், இன்று அந்தக் கட்சி பஞ்சாபில் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனையுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. இன்று சிவசேனாவை எப்படி வலிமையிழக்கச் செய்யலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு தற்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உதவி வருகிறார் என்றார் சரத் பவார்.
பவாரின் கருத்துக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், “பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஷிண்டே அணிக்கு 50 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். நாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும் ஷிண்டேவை முதலமைச்சராக பதவியேற்க வைத்திருக்கிறோம். பவாரின் துயரங்கள் வேறு, இதை நாம் அனைவரும் அறிவோம்” என்றார்.








