பொதுச் செயலாளர் பதவி கலைக்கப்பட்ட நிலையில் மீண்டும் உருவாக்கியது ஏன்?- இபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி அந்த பதவியை கலைத்த பின் மீண்டும் அப்பதவியை உருவாக்கியது ஏன் என  முன்னாள் முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி அந்த பதவியை கலைத்த பின் மீண்டும் அப்பதவியை உருவாக்கியது ஏன் என  முன்னாள் முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜூலை11ந்தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது.

ஓபிஎஸ்  தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.  கடந்த 2017ம் ஆண்டு  நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று கூறி,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என விதிகளில் திருத்தப்பட்டது. அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தான் கட்சியின் அடிப்படை விதி, அந்த விதியை மாற்ற முடியாது. இந்த திருத்தத்தை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டாலும், பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிகளில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ஆனால் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை  மேற்கோள்காட்டினார். அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கும் அறிவிக்கை கொடுக்கப்பட்டது.தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்தார்கள் எனவும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தனது வாதத்தை முன்வைத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகள் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியது.

 மேலும் ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை என்றும் பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அம்மன் வைரமுத்து தரப்பு விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.  அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன்,  பொதுக்குழுவின் போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்டக் கூடாது என்பதே வழக்கில் தமது கோரிக்கை என்றும் அம்மன் வைரமுத்து தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் கூறி அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? என விளக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் தரப்பிடம் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்,  ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் என்றும்  எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாலர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்வதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என இபிஎஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. 2016 ல் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறை சென்ற பின், செயல்பட முடியாததால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று 12/9/17 அன்று  பொதுக்குழுவைக் கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் இபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

1/12/21 செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இரு பதவிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டன. இரு பதவிகளுக்கும் தலா ஒரு வேட்புமனுக்கள் தான் தாக்கல் செய்யப்பட்டன.தேர்தல் விதிகளை பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு மட்டுமே திருத்தப்பட்டன என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. அந்த திருத்தத்திற்கு ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாமல் ஆகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா என விளக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்ய ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ப்பட்டதாகவும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.  அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டனர் என்றும், நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது எனவும் கூறி அதிமுக கட்சி விதிகளை தாங்கள் மீறவில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது.
பெரும்பான்மையினரின் விருப்பம் ஒற்றை தலைமை தான். அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவர் என கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த 1/12/21 முதல் 11/7/22 வரையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் எடுத்த முடிவுகள் செல்லும். அந்த வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனமும் செல்லும் எனவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் விரிவான வாதங்களுக்காக வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.