பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன?

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதன்படி நாளை( பிப்ரவரி 1ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள…

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதன்படி நாளை( பிப்ரவரி 1ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.

1.வரும் 2023-2024ம் ஆண்டு நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6- 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நடப்பு நிதியாண்டில் கணிக்கப்பட்ட 7 சதவீத பொருளாதார வளர்ச்சியைவிட இது குறைவானதுதான் என்றாலும், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடுகளை ஒப்பிடும்போது  தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு இந்தியா என்கிற அந்தஸ்து தக்கவைக்கப்படும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. உலக பொருளாதார மந்த நிலையே வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைவாக கணிப்பதற்கு காரணம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில்   உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும், செலாவணி விகிதத்தின் அடிப்படையில் 5வது பெரிய பொருளாதார சக்தியாகவும் இந்தியா விளங்குவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4.கொரோனா அச்சுறுத்தல், உக்ரைன்-ரஷ்யா போர் ஆகியவற்றால் இழந்தை இந்திய பொருளாதாரம் மீட்டெடுத்துவிட்டது.

5.கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா விரைந்து மீண்டுவந்துள்ளது.

6.மூலதன முதலீட்டில் ஏற்படும் முன்னேற்றம், உள்நாட்டு தேவைகள் போன்றவை வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

7.நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உச்சபட்ச அளவான 6.8 சதவீதத்தை தாண்டி பணவீக்கம் சென்றாலும், தனியார் நுகர்வை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் முதலீட்டிற்கான ஊக்கமும் பணவீக்கத்தால் பாதிப்படையவில்லை.

8.மூலதனக் கட்டமைப்பு, மற்றும் தனியார் நுகர்வு போன்றவற்றால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்ததால் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த  2022ம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 7.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

9. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 9 முக்கிய துறைகளில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

10.இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை, ரூபாய் ஏற்ற இறக்கத்தை சமாளிப்பதற்கு தேவையான அளவிற்கு அந்நியச்செலாவணி சந்தையில் தலையிட போதுமான நிதி ஆதாரம் இந்தியாவிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தால், இந்தியாவின் மதிப்பு தொடர்ந்து பாதிக்கப்படலாம் என்கிற எச்சரிக்கையும் பொருளாதார ஆய்வறிக்கையில் விடப்பட்டுள்ளது.

12. இறக்குமதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பல்வேறு நாடுகளுடன் பரிவர்த்தனை செய்ய திட்டமிட்டப்பட்டு வரும் நிலையில் அது நடந்தேறும்போது  இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டெழும் என்கிற நம்பிக்கையும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எஸ்.இலட்சுமணன் 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.