நடிகராக மாறிய பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகராக புதிய  அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகராக புதிய  அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியை தழுவினார்.

பின்னர் கடந்த ஆண்டு தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கன்னட மொழியில் 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் படமாக்கப்படுகிறது. இத்திரைப்படம் ராஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாப்பாத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத அண்ணாமலை, இயக்குநர் கதையை சொன்னதும் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தில் நடிக்க ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக அண்ணாமலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக  அரபி படத்தின் டீஸர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.