பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதை சரி செய்யவே தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்,…

பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதை சரி செய்யவே தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிசத் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரையும் சந்தித்து பேசினார். பின்னர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேசிய அவர், பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிகழ்வு குறித்து பாஜக கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் சிலதினங்களுக்கு முன் பேசும் போது “2024-ம் ஆண்டில் நாட்டில் பிரதமர் பதவி காலியாக இருக்காது. பிரதமர் மோடி நிச்சயம் மீண்டும் ஆட்சிக்கு வருவார். இது தேவகவுடா காலமோ அல்லது குஜ்ரால்
காலமோ இல்லை என்பதை நிதிஷ் குமாருக்கு நான் நினைவுபடுத்துகிறேன். நாடு இப்போது நிலையான ஆட்சியைத்தான் விரும்புகிறது” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பிரசாரத்தை தொடங்குவதற்கான காரணம் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் ” பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதனால் தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறேன். இந்த விஷயத்தில் எனக்கென்று தனிப்பட்ட திட்டம் எதுவும் கிடையாது. நான் எனக்காக எதையும் செய்யவில்லை, மக்களின் நலனுக்காகத்தான் இதை செய்கிறேன் ” என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஒடிசா சென்று நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ள நிதிஷ் குமார், முன்பு கூறியது போலவே பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, கூடிய விரைவில் நடத்திடுவார் என
எதிர்பாக்கப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.