சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர் களாகவும் பதவி ஏற்றனர். இதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக அவர் பதவியேற்றார்.பதவியேற்ற பின் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி, உற்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இதை பதவி என்று கூறுவதை விட தனக்கு கொடுக்கப்பட்ட பணியாக கருதுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்பு, டெல்லியில் இருந்து முதன் முறையாக எல்.முருகன் இன்று சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.







