அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக போராட்டம் நடத்துவதன் மூலம் உண்மையை மறைக்க காங்கிரஸ் முயல்வதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் நடத்துவது சத்யாகிரக போராட்டம் அல்ல என்றும், சத்தியத்தை மறைப்பதற்கான போராட்டம் என்றும் விமர்சித்தார்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை பாதுகாக்கவே காங்கிரஸ் கட்சியினர் போராடுவதாகவும், நாட்டிற்காக அல்ல என்றும் தெரிவித்த ஜெ.பி. நட்டா, நேஷ்னல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும் என்றும், சட்டத்திற்கு மேலானவராக தன்னைக் கருதிக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
சட்டம் தனது கடமையை செய்கிறது என கூறிய ஜெ.பி. நட்டா, நமது நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சோனியா காந்தி ஊழல் செய்யவில்லை என்றால் விசாரணையைக் கண்டு ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் விமர்சித்தார்.









