மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நேற்று முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.







