நல்ல திட்டங்களை பத்திரிகையாளர்கள் ஆதரித்து எழுத வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

நல்ல திட்டங்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் ஆதரித்து எழுத வேண்டும் எனவும், அப்படி எழுதினால் தான் நீங்கள் விமர்சிக்கும் போதும் அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு…

நல்ல திட்டங்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் ஆதரித்து எழுத வேண்டும் எனவும், அப்படி எழுதினால் தான் நீங்கள் விமர்சிக்கும் போதும் அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூல் தயாராகியுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் கமல்ஹாசன் பேசினார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியலாளுமை எனப் பன்முக ஆற்றலைக் கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரை ஊடகத்துறை பாராட்டுவது பொருத்தமான ஒன்று. தன்னுடைய கலைப்பயணம் பற்றி 60 வாரங்கள் கலைஞர் எழுதியிருக்கக்கூடிய துணுக்குகளைப் படித்தாலே, 50 ஆண்டுக்கால சினிமாவை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டில் ஜனநாயகம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் பத்திரிகை துறை இருக்கும். ஓர் ஆட்சி செயல்படுத்திவரக்கூடிய நல்ல திட்டங்களை, மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான் நீங்கள் விமர்சிக்கும்போதும் அதற்கு உண்மையான மதிப்பும், மரியாதையும் இருக்கும்.

சரியானவற்றை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகைக்கு இருக்ககூடிய தர்மம். அதன்படி தமிழ்நாட்டு பத்திரிகைகள் நடந்துக்கொள்ள வேண்டும் என மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.